Sunday, March 31, 2013

என்ர அவர் கனடாவில


உதடுகளில் அவள்
பெருமையை பூசியிருந்தாள்
இதயக் குமுறலை
மறைப்பதற்காக
விழிகளில் தீயை
எரிய விட்டிருந்தாள்
கசியும் கண்ணீர்
காய்ந்து போவதற்காக
இருமனம் ஒருமனமாகி
வண்ணக் கனவுகளுடன்
மணவறை கண்டு
வாழ்க்கை நதியில்
ஆடித் திளைத்திட
ஏங்கிய உள்ளங்கள்
இரண்டும் இரண்டு நாடுகளில்
வாலிபத்தின் வஞ்சனைகள்
பெற்றவரின் ஏக்கங்கள்
உற்றவரின் ஏளனங்கள்
அயலவரின் முணுமுணுப்புக்கள்
ஊரவரின் கண்வீச்சுக்கள்
நண்பரின் அனுதாபங்கள்
புதியவரின் விசாரிப்புக்கள்
அத்தனையும் அவள் சுமந்தாகனும்
சலனமற்ற சாயம் பூச
அவள் கற்றுக்கொண்டாள்
ஆனால்
மனசு மட்டும்
நீரிலுள்ள வாத்தின்
கால்கள் போல
கனடாவை நோக்கி
ஓய்வின்றி
ஓடிக்கொண்டிருந்தது