Saturday, September 22, 2012

ஞாபகங்கள் !

சுனையொன்றில் கயல்துள்ளி சுழன்றுவீழும்
சிறு அலையில் வீழ்ந்தஇலை சேர்ந்துபோகும்
பனைவிம்பம் நீரலையில் பாம்பென்றாடும்
படர்காற்றும் பனிக்கூதல் பெற்றுவீசும்
வனைந்தகழி மண்பானை வரிசைகாணும்
வந்திருந்து குருவியிசை வாழ்த்துப்பாடும்
நனைந்த மழைக்கிழுவைமரம் நின்றபஞ்சும்
நடுவானில் உலர்ந்தபின் எழுந்துபோகும்

மனையிருந்து பெண்ணின்குரல் மகனைத்தேட
மடியிருந்து வளர்ந்தவனும் மறுத்தும் ஓட
சினை முதிர்ந்த பசுஒன்று சினந்து கத்தும்
சின்னதொரு காகம் முதுகினை கோதும்
முனை எழுதும் ஏர்கொண்டு முதுகில்வைத்தே
முழுவயலும் உழுமெருது மெல்லச்செல்லும்
புனைந்தெழிலை பூண்டமகள் கஞ்சிவைத்து
புகை மணக்கும் அழகினொடு போகக்காண்பாள்

கனி விழவும் காலுதைக்கும் கழுதையொன்றால்
கடுமணலும் சிதற ஒருகல் லெழுந்து
தனியிருந்த குருவியயல் தவரிவீழ
தலை போனதென்றலறி திமிறியெழுந்து
நிலமகளை முத்தமிட நெருங்கும் வான
நீலமதில் கூச்சலிட்டு நெடுக ஓடும்
இனியென்ன செய்வதென இழந்தவாழ்வை
எண்ணியொரு இரந்துண்ணும் உருவம்போகும்

வரும் மழைக்கு முகில் கூடி வானில்நிற்கும்
சரிந்த பனைஒன்றில் குயிலிருந்து பாடும்
சந்தமென நடை போடும்வண்டிமாடும்
எரிந்த உடல் சுடலையொன்று இருந்தமௌனம்
இதனருகே போகுமிளம் பெண்ணின்நெஞ்சம்
விரித்த விழி வேண்டாத விளைவுக் கஞ்சும்
விரைந்த கால் நிறுத்த அயல் குரங்குபாயும்

நரி துரத்தமுயலொன்று நடுவில் ஓடும்
நாகமொன்று வளைந்தோட ஆந்தைகத்தும்
பருந்தொன்று குஞ்சைக் குறி வைத்து வீழும்
பறந்து தாய்க் கோழிபயம் விட்டுத்தாக்கும்
கறந்தபசு கன்றினுக்கு கிடந்தபாலைக்
கொள்ளென்று கூட்டிமனம் கசந்து கத்தும்
மறந்த தமிழ்ப்பாடல்தனை மனனம் செய்யும்
மரத்தடியில் மாணவனு மருகில் குருவும்

துணிவிழந்து பயந்துமொரு துரத்தும் நாயும்
தொல்லையிது என்றோடும் தனித்தமாடும்
பணிவிழந்து பெற்றவனைப் பழித்த மகனும்
பக்கத்தி லறிவுரைகள் பகரும் பெண்ணும்
மணியொலிக்க வேதஒலி மந்திரங்கள்
மாசற்ற இறை கூட்டும் மனிதர் வேண்டல்
புனித ஒளி புண்ணியங்கள் பொலிந்துவாழும்
பொறிகளென எழும் நினைவு புதுமை யன்றொ

Thursday, September 20, 2012

சில சிப்பிகள்

பெற்றவர்கள்
பெற்று விட்ட காரணத்தினால்
குழந்தைகள் உங்களுக்கு அடிமைகள்யில்லை .

நீங்கள் சொல்வதை விட
அவர்கள் சிந்தித்ததை
சொல்ல விடுங்கள் .

சக்தி குறைவான நிலை இது
புத்தி தெளிவான நிலை இது .


"நான் என் குழந்தையை
சுதந்திரமாக வைத்திருக்கிறேன் "
என்பவரின் குழந்தையை
கூப்பிட்டு கேட்டால்தானே தெரியும்
அதன் கூப்பாடு .

கொடி படறுவது போலத்தான் அன்பும்.
அன்பு என்பதை கடைசிவரை
வெளிப்படுத்தத் தெரியாமலே
இறந்துபோகக்கூடிய பெற்றோர்கள்
நிறையப்பேர்

குழந்தையிடம் ஜெயிப்பதை விட
குழந்தையை ஜெயிக்க விட்டு
இரசிப்பதே சுகம் .

நீர் செய்த ஒவ்வொன்றும்
அதன் நியாபகத்தில்இருக்காது
நீர் செய்த சிலவற்றை
அவை மறக்காது .

சில குழந்தை
ஒன்றும் செய்யாமலே செல்லும்
சில குழந்தை
பழிவாங்கவும் துடிக்கும்

நீர் அதற்கு எதிராக செய்த
சிறு செயல்
பின்னால் விஸ்வரூபமெடுக்கும் .

ஒரு குழந்தை செய்த தவறை
மறு குழந்தையும் செய்யுமோ
என செய்து விட்டதாக
பாவிப்பதே அதன் அன்பை பாதிக்கும்

குழந்தை வேண்டும் என்று
தவமிருந்தவர்கள் கூட
சரியாக அவர்களிடம்
நடந்து கொள்வதில்லை

உன்னை உணர்
உயிர்களை
தானாக உணர்வாய் .

Tuesday, September 11, 2012

வெற்றி நிச்சயம் ...

தோல்வியை படிக்கல்லாக்கு
அவமானங்களை விதையாக்கு
முயற்சி என்ற வேறை ஊன்று
வெற்றி !...
என்ற செடி வளர்வது நிச்சயம் ...

Friday, September 7, 2012

பிடிப்பில்லை.....

என்னைப்
பிடிக்கும் உனக்கு.....

உன்னைப் பிடிக்கும்
எனக்கு....

இப்போது
எங்களையே
எங்களுக்கு
பிடிக்கவில்லை......

பிடிப்பில்லாமல்
மாறிவிட்ட
வாழ்க்கையால்.....

Wednesday, September 5, 2012

வாழ்க மனித நேயம்........!

உருவத்தில் அழகு இல்லை - அது
உணர்ந்து கொள்வதில் இருக்கிறது....!

காதல் அழகுதான் - அதில்
கருத்து வேறுபாடு எதுவுமில்லை....!

காதலுக்கு உருவம் உண்டோ ?
கண்ணியமாய் அதை உணர்கின்றோம்...!

காணும் மனிதரை இனி
பார்வையாலே அளவிடுவதை விடுத்து
பாசத்தாலே நாம் அளவிடுவோம்......!

வாழ்க மனித நேயம்........!