Monday, November 25, 2013

ஒரே நாளில் பணக்காரன்

உழைக்கின்ற எண்ணமே குறைந்து போச்சே! 

உட்கார்ந்து சாப்பிடவே நினைக்க லாச்சே!

உல்லாச மாயைகள் பெருகிப் போச்சே! 

ஊரில் துட்டுத்தான் பெரிதாய்ப் போச்சே! 

ஒருராத் திரியில் பணக்காரன் ஆகவே ஒவ்வொரு பயலும் நினைக்கின்றான்! 

உப்புப் பெறாத பயல்கள் கூட ஊரில் ஸ்டைலாய்த் திரிகின்றான்!வாய்ப்பேச் சாலே காரியம் செய்து வாழ்க்கையை நடத்தப் பார்க்கின்றான்! 

வந்த வரைக்கும் இலாபம் என்றே மாட்டிய பேர்களை ஏய்க்கின்றான்!எதிலஎதில் மக்கள் ஏமாறு வாரென்ற இலக்கணம் கற்றுத் தெளிகின்றான்! அதில்அதில் நுழைந்து வேலையைக் காட்டி அள்ளிச் சுருட்டிச் செல்கின்றான்! விளம்பரத் தாலே வித்தைகள் காட்டி வேசியைப் போல மயக்குகின்றான்! 

விட்டில் பூச்சியாய் விழுகின்ற மக்களை விழுங்கி ஏப்பம் விடுகின்றான்!

அரசியல்வாதி அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொள்கின்றான்! 

பிரச்னை வந்தால் சட்டத்தின் ஓட்டையில் புகுந்து தப்பிச் செல்கின்றான்! 

உழைப்பு, நேர்மை, தியாகம் என்றால் ஓ ஓ என்று சிரிக்கின்றான்! உருட்டு, புரட்டு, திருட்டு, மிரட்டே ஊரில் ஜெயிக்கும் என்கின்றான்! ஜாலியாய் இருப்பதே வாழ்க்கை என்று தத்துவம் பேசிச் சிரிக்கின்றான்! 

சாயுங் காலம் வந்துவிட்டாலவன் தாசி மதுவெனத் திரிகின்றான்! சிறுகச் சேர்த்துப் பெருக வாழும் சிந்தனை எல்லாம் போயாச்சே! பெருகச் சேர்த்துச் சிறுக வாழும் சின்னப் புத்தி வந்தாச்சே!

லண்டனில் ஓர் தமிழன்

   தாய் நாட்டில் வழியிருக்க.. 

தாய் தகப்பன் அயலிருக்க.. 
கற்றதமிழ் நாவிருக்க..- என் 
மனம் மட்டும் மறுத்தது உடனிருக்க.. 

பள்ளிக்கூட வாழ்க்கை முற்றுப்பெற 
வெளிநாட்டு மோகம் சற்றுத்தொட.. 
மாறுகின்ற சமூகப்போக்கின் முன்னோடியாக 
வெளிநாடு ஒன்றே முன்னிலையானது.. 

ஒரேயொரு ஆண்பிள்ளை 
ஆசைப்பட்டு கேட்டான் என்று - அம்மா 
அடகுவைத்து காசெல்லாம் 
ஆரார்க்கோ கைமாற்றி.. 

கண்டவனின் கால் பிடித்து 
கெஞ்சி மன்றாடி - வலியது மறந்து 
எனக்காய் போராடி - கடைசியில் 
மாணவனாய் அனுமதித்தான் வெள்ளைக்காரன் 

அவன் தந்த விசாவுக்கு மதிப்பளித்து 
வந்தேன் வெளிநாடு- பெற்றொரை தவிக்கவிட்டு.. 
வந்த சந்தோசம் கவலைகளை மறைத்தது 
புதுவித தனிமை ஒருவித இனிமை.. 

அம்மாவை விட்டு விலகாமல் இருந்த நான் 
வாரம் ஒருமுறை அழைப்பு -பின் மாதம் ஒருமுறை 
படிப்பும் வேலையும் நிரந்தரமாய்.. 
வாழ்க்கையே மாறியது இயந்திரமாய் 

அப்பா செலவில் கஸ்டம் தெரியவில்லை அப்போ 
செலவுக்காய் வேலை செய்து கஸ்டப்படுவது இப்போ 
அஞ்சுக்கும் பத்துக்கும் நாள் முழுக்க வேலை பார்த்து 
அதில பாதி படிப்புக்கு, மீதி செலவுக்கு 

யூனிவர்சிட்டி போகாட்டி UKBA பிடிப்பாங்க 
வேலைக்கு போகாட்டி சாப்பாடு கிடைக்காது 
ஒவ்வொரு நாளும் யுகமாய் தெரியுது.. 
ஒருமுறை தான் வாழ்க்கை- அதுவும் வீணே கழியுது 

தீபாவளி பொங்கல் எதுவும் தெரியாது 
தீயவன் நல்லவன் பேதம் புரியாது 
ஏமாற்றம் நஷ்டங்கள் பல வந்து போயின - என் 
மனமாற்றம் இப்ப நொந்து போயின 

தமிழன் என்ற உணர்விழந்தேன் 
எல்லோருக்கும் அடிபணிந்தேன் 
இரவு பகல் பனி வெயில் நினைவிழந்தேன் 
விதியதனை எண்ணி தலை குனிந்தேன்.. 

இடைவேளை ஐந்து நிமிடம் - 
அம்மாவுடன் தொலைபேச.. 
தமிழையும் மறக்காமல்- சிறு 
கவிதை இங்கு வலை வீச.....