Tuesday, December 31, 2013

2014 ஐ மலரவிடுங்கள்

 அமைதிப் பூக்களாய் 

அன்பு மனிதர்களாய் 
அறிவு மழலைகளாய் 

ஆனந்த மனங்களாய் 
ஆதரவு கரங்களாய் 
ஆரோக்கிய அறிவியலாய் 

என் சமூகம் மகிழ்ச்சியில் திளைத்து 
தழைத்தோங்க ! 
புத்தாண்டை வீசிடுங்கள் தென்றலாய் ! 
என் தேசத்து இளைஞர்களின் 
கனவு மொட்டுகள் மலர்ந்திடட்டும் ! 


Saturday, December 28, 2013

உயிராய் உடன் பிறவா தங்கை - அன்பில் அழியும் அண்ணன்


 

என் உயிராய் உடன் பிறவா தங்கை 


சிறுவயது முதலே 
சில உறவால் ஒதுக்கப்பட்டவன் 
அன்பையும் அக்கறையையும் தேடி தேடி 
அலைந்தவன் நான் 

மூன்று வருடம் 
இளைய தங்கையே !! 
நான்கு வருடம் முன்புதான் 
நாம் பழக துவங்கினோம் ..! 

"அண்ணா" என்று அழைப்பாள் 
அதில் அப்படி ஒர் அழகும் அன்பும் !! 


உன்னுடன் பேசி மகிழ்வதையே 
என்றும் இன்பமாய் கொண்டவன் நான் 

எதை கேட்டாலும் - நீ 
நீண்ட நேரம் யோசிப்பாய் - இறுதியில் 
"தெரியவில்லை அண்ணா " என்பாய்...!! 

பேசுங்கள் அண்ணா என்பாய் 
ஆனால் நீ பேச மாட்டாய் .! 
ஏன் என கேட்டால் 
"நான் சின்ன பிள்ளை" என்பாய்..!! 

சாப்பிடுங்கள் என்று மட்டும் 
சொல்லவில்லை 
உனக்காக சமையுங்கள் என்பாய் ..! 

இப்படி எல்லாம் உன் அன்பில் 
என்னை வாழ வைத்தாய் தங்கையே..!! 

ஏன் தங்காய் - இப்போது மட்டும் 
காரணமின்றி பேச மறுக்கிறாய்..!! 

காதல் கூட கரைந்து விடும் - ஆனால் 
உன் அன்பு அழியாது !! 

காதலை விட 
சில உறவால் ஒதுக்கப்பட்டவன் - மட்டுமே 
வாழ்க்கையை வெறுக்கிறான் 
அன்பை தேடி தேடி அலைகிறான் !! 

நீ என்னுடன் பிறக்கவில்லை 
என்று யார் சொன்னார்கள் 
இதோ என் உயிராக வாழ்கிறாய் 

என் விழிகள் - உன் புன்னகைக்காகவும் 
என் செவிகள் - உன் சிரிப்பொழிக்காகவும் 
காத்திருக்கின்றன தங்கையே 
இதோ அன்பில் அழியும் அண்ணன் 


கோபம் என்பது அமிலமாகும்

முன்புநான் கோபப்பட்டபோதெல்லாம் 
அவள்சொன்னாள் இதயமேயில்லையென்று 
இன்றுநான் கோபத்தையடைக்கியபோது 
மருத்துவர்சொன்னார் இதயத்தில்அடைப்பென்று. 

நான் சொன்னேன் கோபப்பட்டபோதெல்லாம் 
இதயத்தில் ஒன்றுமேவைக்கவில்லை 
கோபத்தையடைக்கியபோது எல்லாமே 
இதயத்திற்குள் புகுந்ததுபோலும். 

கலங்கியவளைப் பார்த்துச் சொன்னேன் 
ஒன்றுநிச்சியம் புரிந்துக்கொள் 
கோபப்பட்டபோதும் இப்போதும் 
என்னிடத்தில் இதயம் இருக்கின்றது. 

ஆனால்உண்மை ஒன்றுஉரைத்திடுவேன் 
கோபம் என்பது அமிலமாகும் 
வித்தியாசமென்பது அதற்கில்லை 
எல்லோரையும் அரித்துச்சிதைத்துவிடும்

Friday, December 27, 2013

துரோக முள்

  என் கற்றைக் கோபங்களெல்லாம் 

ஒற்றை நாளில் முடிந்து போகும் 
ஈசலின் ஆயுளைப் போலத்தான்... 
எனினும் 
உன் நட்பின் அழுக்கை 
ஈசனின் நெற்றி நெருப்பைப் போல 
சுட்டெரித்து விட்டது...! 

எப்படிச் சாத்தியப்பட்டது 
உன்னால் 
நம் நட்பின் முகத்தில் 
அமிலம் வீச...! 

ஆழம் குறைந்த 
உன் நட்பு நதியில் 
இனி 
என் நேசப் படகைச் செலுத்த முடியாது 
சேற்றில் எப்படிச் செலுத்துவது நட்பை...? 

அஞ்சு வயதில் 
அம்மணமாய் நிற்பதைப் போல 
ஆயுசுக்கும் நிற்க முடியாது 
அறியாதவனா நீ...? 

தொண்டையில் சிக்கிய 
துரோக முள்ளாக 
விழுங்கவும் முடியாமல் 
துப்பவும் வழியற்று 
ரணப்படுத்தும் 
உன் நட்பு வார்த்தைகள்...! 


Friday, December 20, 2013

உணர்வுகள் சில உனக்காய்,,,, டைரியில் உறங்கியவை

உன்னை உணர்ந்தது போல்நான் 
யாரையும் 
உணர்ந்ததும் இல்லை,,, 

உன்னை பார்க்காத இந்த விழிகள் 
துளி உறங்கியதும் கூட இல்லை,,,, 

உன்னை சுவாசிக்கும் பொழுதினை கூட 
சுகமாக நினைக்கிறேன்,,, 

என் உயிர்வரை உன்னை 
நினைத்து நினைத்து,,,மகிழ்கிறேன்,,, 

என் உயிர் துறந்தாலும்,,, 
உனக்கென துறக்கிறேன்,,, 

துறவியாய் போ என்று 
சொன்னாலும் போகிறேன்,,, 

இல்லை உன் ஆவியாய் 
தொடர்ந்துவிடு 
என்றாலும் தொடர்கிறேன்,,, 

என் இந்த ஜென்மம் அது உனக்காக,,, 
முடியும்வரை நான் காத்திருப்பதும்,,, 
உன் ஓர பார்வைக்காக,,,, 

மன்னித்துவிடு பிழையிருந்தால்,,, 
மறந்துவிடு,,,, 
என்னை நேசிக்காமல் இருந்தால்,,, 

ஆம்,,,, 
திருடனாய் கூட வாழ ஆசைபடுகிறேன்,,, 
உன் இதயம் திருடுகிறக் கள்வனாய்,,,, 

நீ சம்மதித்தால் 
வாழ்நாள் முழுவதும்,,,, 

இல்லையென்றாலும்,, 
இன்னொரு ஜென்மம் எடுப்பேன்,,, 

உன்னை காணவே நான்,,,,,, 


Sunday, December 1, 2013

வேதனையின் சாதனை

கட்டியவன்(ள்) இருக்க 

கண்டவனை(ளை) புணரும் 

கண்ணியவான்(வதி)களுக்கு 

காலத்தின் மேடையில் 

வழங்கும் கேடயம். 


இரகசிய நாடகங்களை 

வெளிச்சம் போட்டுக்காட்டும் 

வித்தியாசமான ஊடகம். 


நம்பிக்கை 

துரோகங்களாக 

அச்சடிக்கப்படுகின்ற 

அந்தரங்கப் பதிப்புகளை 

வெளியீட்டு விழாவாக்கிக் 

வெற்றி காணும் பதிப்பகம். 


ஒழுக்கம் தவறிய 

மானுடத்திற்கு 

ஏழை பணக்காரன் 

பாரபட்சம் காட்டாமல் 

சரியான தீர்ப்பளிக்கும் நீதிபதி. 


ஒருவனுக்கு ஒருத்தியெனும் 

வள்ளுவத்தின் வாக்கிற்கு 

உயிரூட்டி 

இராமன் சீதை கண்ணகி 

வாழ்க்கைக்கு 

மானுடத்தை அழைத்துச் செல்ல 

படையெடுக்கும் 

வைரஸ்களின் போராட்டம். 


பதர்தனை மட்டும் 

அறுவடை செய்ய 

விதைக்கப் படுகின்ற 

வித்தியாசமான விதை. 


விதைப்பவனுக்கும் 

விளை நிலத்திற்கும் 

இடையேயான போராட்டத்தில் 

விளைகின்ற 

மானம்கெட்டப் பயிர் 


கண்மூடித்தனமான 

இருவரின் துடிப்பில் 

கண் கூடத் திறவா 

மூன்றாவது உயிரில் கலந்து 

வம்சத்தை தாக்கும் விஷம். 


விலைமதிப்பில்லா உயிரை 

மெல்ல மெல்ல குடித்தபோதும் 

வாழ்கையின் உயிர் நாடியான 

மானத்தை உடனடியாக 

குடித்து விடுவதால் 

இதுவும் ஒருவகை சயனைட். 


இடைவேளை(லை)களிலே 

வணக்கம் போட்டு 

வாழ்க்கை திரைப்படத்தை 

முடித்து விடும் 

சினிமா கொட்டகை 


விழிகள் இருந்தும் குருடாக 

மொழிகள் இருந்தும் ஊமையாக 

வாய்ப்பளிக்கும் எய்ட்ஸ் 

விலை கொடுத்து வாங்கும் வேதனை. 

வாங்கியவன் அடைந்ததில்லை சாதனை