Monday, May 26, 2014

காட்சிகளும் மாறிடுமோ ​

​பொய்யும் புரட்டும் பெருகுது 

மெய்யும் நாட்டில் மறையுது ! 

​செய்யும் தொழிலோ தேயுது 

பெய்யும் மழையும் குறையுது ! 


வாய்மை வளைந்தே போனது 

நேர்மை குனிந்தே செல்லுது 

உண்மை என்றுமே உறங்குது 

அறியாமை எதிலும் நிலவுது ! 


பகைமை நட்பை முந்துது 

பொறாமை தீயே பரவுது 

பொறுமை நிதானம் இழக்குது 

பொய்மை உலகை ஆளுது ! 


சுயநலமே முன்னிலை வகிக்குது 

சுரண்டிடும் எண்ணமே வளருது 

சுமைகளே நமைசுற்றி நிற்குது 

சூதும்வாதுமே ஓதும் வேதமாகுது ! 


காண்பதும் நிகழ்வதும் இவையன்றோ 

மாறுவதும் தேறுவதும் என்றுதானோ 

மகிழ்வதும் வெல்வதும் என்றுதானோ ! 



Sunday, May 11, 2014

யோசிக்கும் உறவுகள்

முடிந்தவரை ஒதிங்கி விடு 
இந்த உறவுகளை விட்டு 

உன் மீது முழுமையான பாசம் 
இல்லை விட்டு விடு 

வேஷம் கொண்ட முகங்க்களாய் 
தினம் தோன்றும் 

வேற்றுமை கொண்ட மனம் அது 
நிஜங்கள் பேரம் பேசும் 

தனக்கு மட்டும் என்ற நிலை 
இணக்கமாய் கொண்டு விடும் 

கணக்கு போட்டு வாழ்கையில் 
இனி காய் நகர்த்தும் மெல்ல 

உண்மையான அன்பை என்றும் 
உன்னிடம் தேடு 

போலி வேஷம் களையும் நாள் 
உன் கண் முன் தோன்றும் 

பணத்தை நேசிக்கும் முகங்கள் 
பாசத்தை நேசிக்க யோசிக்கும் ! 

Saturday, April 26, 2014

உன்னால் முடியும்

காற்று மோதி, 
காயங்கள் வராது.. 
வேதனை தீண்டாமல் 
வரலாறுகள் உன்னை தொடாது.. 

"பரிசுகள் போதை தரும், 
தோல்விகள் போதனை தரும்" 
உதாசின பேச்சுகள் ஏற்க மறுத்தால் 
மணிமகுடம் சூட தகுதிகள் கிடையாது உனக்கு... 

கண்களில் விழுந்த தூசியே உறவுகள் 
உறுத்திக்கொண்டேயிருக்கும் 
உதறி தள்ளிவிடு அதை.. 

உன்னை உதாசினப்படுத்துவதே 
உறவுகள்.. 
உன்னை உயர வைப்பது அந்த 
உதாசினங்கள்... 

உதாசினங்களை சந்திக்காத மனிதன் 
உயரங்களை எட்ட முடியாது.. 

மழையாய் முயற்சி செய் 
துளிர் விடும் உன் வெற்றி.. 
"மௌனமாய் நீ நின்றால் 
உன் நிழலும் 
உனக்கு எதிரி" 

உழைக்கும் இடமாக்கு மூளையை.. 
வெற்றிடமாய் கிடந்தால், 
வெள்ளாமைக்கு பயன்படாமல் போய்விடும் 

பேனா முனைகள் 
வலி பொறுக்க இயலாவிட்டால் 
கவிதைகள் வராது.. 

தோல்வியின் வலி 
பொறுக்க இயலாதவன், 
வெற்றிக்கு கொக்கரிக்க 
தகுதி இல்லாதவன்... 

உன்னை உதாசினப்படுத்தும் உறவை 
நீ உதாசினப்படுத்து.. 
உன்னை பக்குவப்படுத்தும் தோல்விகளை 
நீ சொந்தமாக்கு.. 
பின் வெற்றி என்னும் சொல் 
உனக்கு சொந்தமாகும்...

Saturday, March 29, 2014

என் மரணம்

உடை வாளை 
இறுக்காத சரணகதியும் 
உயிர் வாழ கேட்கின்ற 
இறுதி நிலையுமாய் 
அமையும் அத்தருணம் 

நிகழ்கால நிரலொன்றின் 
நிச்சிலப் பொழுதொன்றில் 
நிமிடத்திற்கும் 
வினாடிக்கும் இடையில் 
கண்காணிப்பை மீறி 
கணிக்கப் பட்டிருக்கும் அந்நொடி 

யார் பிடித்து வைத்திருப்பாரோ 
யாருக்கும் தெரியாது 
உள்ளிழுத்த காற்றை 
வெளியேற விடாத வேளையாய் 
சம்பவிக்கும் அச் சடங்கு 

உடன்கட்டை ஏற என்னுடன் 
ஒப்புக்கொண்டவள் 
உயிர் கட்டை இறங்க 
தப்பிக் கொண்டவளாய் தள்ளி நின்று 
ஒப்பாரியை ஒப்புவிப்பாள் ஊருக்கு 

பிள்ளைப் பாத்திரங்கள் 
பிரிந்த மாத்திரத்தில் 
கண்கள் பனிப்பார்கள்-கொஞ்சம் 
கவலை தொனிக்க 

சக சொந்தங்கள்-என் 
சா முன் குறை மெழுகி 
அனுதாப பூச்சுகளால் 
அநியாயத்துக்கு வெள்ளையடிப்பர் 

பெயர் மறந்த ஊர் பிரியத்தின் பேரால் 
“மையத்து”அல்லது பிணம் என்று 
மகுடம் சூட்டுவர் 

ஊர் வலமாய் வரும்-என் 
உடல் வளம் கைமாற 
நான் ஆக்கிரமித்த மண் 
என்னை ஆக்கிரமிக்க 
வாய் பிளந்து 
வழிபார்த்து காத்திருக்கும். 

Thursday, March 27, 2014

மனம் எனும் கொதிகலன்


 அலைமோதும் எண்ணங்களின் 
ஆர்ப்பாட்டத்தால் 

தேடல்களில் ஏமாற்றங்கள் .. 
தோல்விகளில் தாக்கங்கள் .... 

வருத்தங்களின் பதிவுகள் ... 
வலிகளால் வலிகள் ... 

நிகழ் காலத்தின் தாக்கங்கள் 
எதிர் காலத்தின் காயங்கள் .. 

சலனமான எண்ணங்களினால் 
சமுதாயத்தில் ஒதுக்கல்கள்... 

மனம் கொதிகலனாய் செயல்பட்டு 
பாளம் பாளமாய் வெடிப்புக்கள் .. 

அமைதியை தொலைத்து 
அணு அணுவாய் சிதையும் இக் கால கட்டத்தில் 

மனதை கட்டுபாட்டுக்குள் வைக்க 
மன அமைதியோடு வாழ விதி முறைகள் ..... 

"நீ சிரித்து பார் 
உன் முகம் உனக்கு பிடிக்கும் 

நீ மற்றவர்களை சிரிக்க வைத்து பார் 
உன் முகம் மற்றவர்களுக்கு பிடிக்கும் ".. 

தேடல்கள் .... 
வாழ்வின் அனுபவங்கள் .... 

மகிழ்ச்சியான சுற்றுப்புறதிர்க்கு 
மனம் எனும் கொதிகலனை 

மிதமான தீயில் வைத்து 
நேரத்தை நேர்மையாய் பயன்படுத்தி 

விடா முயற்சியை தூண்டிலாக்கி 
இலக்கை இலகுவாய் தொடுவோம் 

இனிமையாய் செயல் படுவோம் 

இன்று மட்டும் தான் இன்று 
நாளை இன்று நேற்றாகி விடும் ....

Sunday, February 9, 2014

நட்புடன் கூடிய உறவு

   கண்ணீர் துடைக்க



 

கைக்குட்டை வேண்டாம்
கரமொன்று வேண்டும்
தாங்கி பிடிக்க ஊன்றுகோல் வேண்டாம்
உறவொன்று வேண்டும்
ஆறுதல் சொல்ல வார்த்தைகள் வேண்டாம்
அரவணைக்க தோள்கள் வேண்டும்
வாழ்த்துக்கள் சொல்ல பரிசுகள் வேண்டாம்
வாய் மொழி போதும்
வழி நடத்திட வாழ்வை உயர்த்திட உறவுகள் வேண்டாம்
நட்புடன் கூடிய உறவே வேண்டும்...

Saturday, January 11, 2014

வேண்டாத மோகம்

களி ஆட்டமும், கத்தும் இசையும், 
நவ நாகரிகம் என்றால், 
பாட்டும், பரதமும், 
பண்பாடு தரும் சுகமல்லவா ! 

பயன்பாடு என்ற பெயரால் , 
பரிகசிக்கும் உடையணிந்து , 
உடல் அழகு வெளிக்காட்டுதல் முறையோ ? 
பாவாடை, தாவணி, சேலையும், 
பார்ப்பவர் மதிக்கும் உடையல்லவா ! 

உண்டி சுருங்கின் நன்று ! 
உடை சுருங்கின் நன்றாமோ ? 

நுனி நாக்கு ஆங்கிலம் மேதா விலாசம் என்றால், 
தன்னிகரில்லா தமிழ், தாயினும் மேலான 
நம் தாய் மொழி அல்லவா ! 

வாயில் நுழையாத பேரும், 
கலந்தது தெரியாத பொருளும், 
உடம்பை கெடுக்கும் உணவு உயர்வு என்றால், 
அரிசி மாவு புட்டும் மிளகோடு பொங்கலும் 
செரிக்கும் சரியான காலை உணவல்லவா ! 

தேனீரும், காப்பியும் சரிதான் 
சாயக்கலக்கலாம் கோக்கும், பண்டாவும் 
உன்னத பானமென்றால் 
சுக்கு காப்பியும், கூழும், கஞ்சியும்,நீராகாரமும் உடல் உறுதி 
தரும் பருகும் பானமல்லவா ! 

உயர்வை நிறைவையும் புறம் தள்ளி 
புரியாத தெரியாத பொருள் மேல் 
வேண்டாத மோகம் கொள்ளுதல் சரியோ ?

Friday, January 10, 2014

புத்தெழுச்சியாய் மீட்பாய் விடை

இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கும் 
தூக்கம் கலை ; 
சோம்பலைத் தழுவும் 
கதகதப்பா உன் நிலை ? 
துணிச்சலுக்கு கொடு விலை ! 

எழுக தொய் மனமே 
அழுந்திக் கிடப்பதில் ஆழமாகாதே ; 
பகலவனைப் பார் 
விடியலுக்குள் பொன்மணித்தேர் 
விரைந்துன் இலக்கு சேர் ! 

அளவீட்டுத் தந்திரம் 
அறிந்தவர் பலர் இங்கே; 
இரு கைகளுக்குள் உலகை மூடு 
வெளிச்சம் உனக்குள் தேடு 
நாளைக்கு வேறு தினம் , இன்றே ஓடு ! 

நடப்பதைக் கவனி 
ஒரு பிடிக்குள் இரையாகவும் 
வசனகர்த்தாக்களுக்குத் திரையாகவும் 
சுயநலப் பாய்ச்சலுக்குக் கரையாகவும் 
பொதுவாய்ச் சம்மணமிட்டிருப்பாய் ! 

தூண்டிலாகு 
பொறுமையின் எல்லை காண்பாய் ; 
தடுமாறத் தவறு 
தலைக்குனிவுகளைத் தணலில் சிதறு 
கிளிப்பிள்ளை சமுதாயம் உதறு ! 

காகிதப் பூக்களுக்கும் 
விலையதிகம் இந்நாளில் ; 
கருத்தினில் சதைப்பற்று பெருக்கு 
அலட்டல்களை உருக்கு 
தோல்வியை சங்கடத்திற்குள் நெருக்கு ! 

சுதந்திரமாய்க் கூடுகட்டு 
தனிமைப் பூங்காவில் ; 
கால்விலங்கு உடை 
கவனம் கையாள ஏது தடை ?! 
புத்தெழுச்சியாய் மீட்பாய் விடை !