Tuesday, December 31, 2013

2014 ஐ மலரவிடுங்கள்

 அமைதிப் பூக்களாய் 

அன்பு மனிதர்களாய் 
அறிவு மழலைகளாய் 

ஆனந்த மனங்களாய் 
ஆதரவு கரங்களாய் 
ஆரோக்கிய அறிவியலாய் 

என் சமூகம் மகிழ்ச்சியில் திளைத்து 
தழைத்தோங்க ! 
புத்தாண்டை வீசிடுங்கள் தென்றலாய் ! 
என் தேசத்து இளைஞர்களின் 
கனவு மொட்டுகள் மலர்ந்திடட்டும் ! 


Saturday, December 28, 2013

உயிராய் உடன் பிறவா தங்கை - அன்பில் அழியும் அண்ணன்


 

என் உயிராய் உடன் பிறவா தங்கை 


சிறுவயது முதலே 
சில உறவால் ஒதுக்கப்பட்டவன் 
அன்பையும் அக்கறையையும் தேடி தேடி 
அலைந்தவன் நான் 

மூன்று வருடம் 
இளைய தங்கையே !! 
நான்கு வருடம் முன்புதான் 
நாம் பழக துவங்கினோம் ..! 

"அண்ணா" என்று அழைப்பாள் 
அதில் அப்படி ஒர் அழகும் அன்பும் !! 


உன்னுடன் பேசி மகிழ்வதையே 
என்றும் இன்பமாய் கொண்டவன் நான் 

எதை கேட்டாலும் - நீ 
நீண்ட நேரம் யோசிப்பாய் - இறுதியில் 
"தெரியவில்லை அண்ணா " என்பாய்...!! 

பேசுங்கள் அண்ணா என்பாய் 
ஆனால் நீ பேச மாட்டாய் .! 
ஏன் என கேட்டால் 
"நான் சின்ன பிள்ளை" என்பாய்..!! 

சாப்பிடுங்கள் என்று மட்டும் 
சொல்லவில்லை 
உனக்காக சமையுங்கள் என்பாய் ..! 

இப்படி எல்லாம் உன் அன்பில் 
என்னை வாழ வைத்தாய் தங்கையே..!! 

ஏன் தங்காய் - இப்போது மட்டும் 
காரணமின்றி பேச மறுக்கிறாய்..!! 

காதல் கூட கரைந்து விடும் - ஆனால் 
உன் அன்பு அழியாது !! 

காதலை விட 
சில உறவால் ஒதுக்கப்பட்டவன் - மட்டுமே 
வாழ்க்கையை வெறுக்கிறான் 
அன்பை தேடி தேடி அலைகிறான் !! 

நீ என்னுடன் பிறக்கவில்லை 
என்று யார் சொன்னார்கள் 
இதோ என் உயிராக வாழ்கிறாய் 

என் விழிகள் - உன் புன்னகைக்காகவும் 
என் செவிகள் - உன் சிரிப்பொழிக்காகவும் 
காத்திருக்கின்றன தங்கையே 
இதோ அன்பில் அழியும் அண்ணன் 


கோபம் என்பது அமிலமாகும்

முன்புநான் கோபப்பட்டபோதெல்லாம் 
அவள்சொன்னாள் இதயமேயில்லையென்று 
இன்றுநான் கோபத்தையடைக்கியபோது 
மருத்துவர்சொன்னார் இதயத்தில்அடைப்பென்று. 

நான் சொன்னேன் கோபப்பட்டபோதெல்லாம் 
இதயத்தில் ஒன்றுமேவைக்கவில்லை 
கோபத்தையடைக்கியபோது எல்லாமே 
இதயத்திற்குள் புகுந்ததுபோலும். 

கலங்கியவளைப் பார்த்துச் சொன்னேன் 
ஒன்றுநிச்சியம் புரிந்துக்கொள் 
கோபப்பட்டபோதும் இப்போதும் 
என்னிடத்தில் இதயம் இருக்கின்றது. 

ஆனால்உண்மை ஒன்றுஉரைத்திடுவேன் 
கோபம் என்பது அமிலமாகும் 
வித்தியாசமென்பது அதற்கில்லை 
எல்லோரையும் அரித்துச்சிதைத்துவிடும்

Friday, December 27, 2013

துரோக முள்

  என் கற்றைக் கோபங்களெல்லாம் 

ஒற்றை நாளில் முடிந்து போகும் 
ஈசலின் ஆயுளைப் போலத்தான்... 
எனினும் 
உன் நட்பின் அழுக்கை 
ஈசனின் நெற்றி நெருப்பைப் போல 
சுட்டெரித்து விட்டது...! 

எப்படிச் சாத்தியப்பட்டது 
உன்னால் 
நம் நட்பின் முகத்தில் 
அமிலம் வீச...! 

ஆழம் குறைந்த 
உன் நட்பு நதியில் 
இனி 
என் நேசப் படகைச் செலுத்த முடியாது 
சேற்றில் எப்படிச் செலுத்துவது நட்பை...? 

அஞ்சு வயதில் 
அம்மணமாய் நிற்பதைப் போல 
ஆயுசுக்கும் நிற்க முடியாது 
அறியாதவனா நீ...? 

தொண்டையில் சிக்கிய 
துரோக முள்ளாக 
விழுங்கவும் முடியாமல் 
துப்பவும் வழியற்று 
ரணப்படுத்தும் 
உன் நட்பு வார்த்தைகள்...! 


Friday, December 20, 2013

உணர்வுகள் சில உனக்காய்,,,, டைரியில் உறங்கியவை

உன்னை உணர்ந்தது போல்நான் 
யாரையும் 
உணர்ந்ததும் இல்லை,,, 

உன்னை பார்க்காத இந்த விழிகள் 
துளி உறங்கியதும் கூட இல்லை,,,, 

உன்னை சுவாசிக்கும் பொழுதினை கூட 
சுகமாக நினைக்கிறேன்,,, 

என் உயிர்வரை உன்னை 
நினைத்து நினைத்து,,,மகிழ்கிறேன்,,, 

என் உயிர் துறந்தாலும்,,, 
உனக்கென துறக்கிறேன்,,, 

துறவியாய் போ என்று 
சொன்னாலும் போகிறேன்,,, 

இல்லை உன் ஆவியாய் 
தொடர்ந்துவிடு 
என்றாலும் தொடர்கிறேன்,,, 

என் இந்த ஜென்மம் அது உனக்காக,,, 
முடியும்வரை நான் காத்திருப்பதும்,,, 
உன் ஓர பார்வைக்காக,,,, 

மன்னித்துவிடு பிழையிருந்தால்,,, 
மறந்துவிடு,,,, 
என்னை நேசிக்காமல் இருந்தால்,,, 

ஆம்,,,, 
திருடனாய் கூட வாழ ஆசைபடுகிறேன்,,, 
உன் இதயம் திருடுகிறக் கள்வனாய்,,,, 

நீ சம்மதித்தால் 
வாழ்நாள் முழுவதும்,,,, 

இல்லையென்றாலும்,, 
இன்னொரு ஜென்மம் எடுப்பேன்,,, 

உன்னை காணவே நான்,,,,,, 


Sunday, December 1, 2013

வேதனையின் சாதனை

கட்டியவன்(ள்) இருக்க 

கண்டவனை(ளை) புணரும் 

கண்ணியவான்(வதி)களுக்கு 

காலத்தின் மேடையில் 

வழங்கும் கேடயம். 


இரகசிய நாடகங்களை 

வெளிச்சம் போட்டுக்காட்டும் 

வித்தியாசமான ஊடகம். 


நம்பிக்கை 

துரோகங்களாக 

அச்சடிக்கப்படுகின்ற 

அந்தரங்கப் பதிப்புகளை 

வெளியீட்டு விழாவாக்கிக் 

வெற்றி காணும் பதிப்பகம். 


ஒழுக்கம் தவறிய 

மானுடத்திற்கு 

ஏழை பணக்காரன் 

பாரபட்சம் காட்டாமல் 

சரியான தீர்ப்பளிக்கும் நீதிபதி. 


ஒருவனுக்கு ஒருத்தியெனும் 

வள்ளுவத்தின் வாக்கிற்கு 

உயிரூட்டி 

இராமன் சீதை கண்ணகி 

வாழ்க்கைக்கு 

மானுடத்தை அழைத்துச் செல்ல 

படையெடுக்கும் 

வைரஸ்களின் போராட்டம். 


பதர்தனை மட்டும் 

அறுவடை செய்ய 

விதைக்கப் படுகின்ற 

வித்தியாசமான விதை. 


விதைப்பவனுக்கும் 

விளை நிலத்திற்கும் 

இடையேயான போராட்டத்தில் 

விளைகின்ற 

மானம்கெட்டப் பயிர் 


கண்மூடித்தனமான 

இருவரின் துடிப்பில் 

கண் கூடத் திறவா 

மூன்றாவது உயிரில் கலந்து 

வம்சத்தை தாக்கும் விஷம். 


விலைமதிப்பில்லா உயிரை 

மெல்ல மெல்ல குடித்தபோதும் 

வாழ்கையின் உயிர் நாடியான 

மானத்தை உடனடியாக 

குடித்து விடுவதால் 

இதுவும் ஒருவகை சயனைட். 


இடைவேளை(லை)களிலே 

வணக்கம் போட்டு 

வாழ்க்கை திரைப்படத்தை 

முடித்து விடும் 

சினிமா கொட்டகை 


விழிகள் இருந்தும் குருடாக 

மொழிகள் இருந்தும் ஊமையாக 

வாய்ப்பளிக்கும் எய்ட்ஸ் 

விலை கொடுத்து வாங்கும் வேதனை. 

வாங்கியவன் அடைந்ததில்லை சாதனை

Monday, November 25, 2013

ஒரே நாளில் பணக்காரன்

உழைக்கின்ற எண்ணமே குறைந்து போச்சே! 

உட்கார்ந்து சாப்பிடவே நினைக்க லாச்சே!

உல்லாச மாயைகள் பெருகிப் போச்சே! 

ஊரில் துட்டுத்தான் பெரிதாய்ப் போச்சே! 

ஒருராத் திரியில் பணக்காரன் ஆகவே ஒவ்வொரு பயலும் நினைக்கின்றான்! 

உப்புப் பெறாத பயல்கள் கூட ஊரில் ஸ்டைலாய்த் திரிகின்றான்!வாய்ப்பேச் சாலே காரியம் செய்து வாழ்க்கையை நடத்தப் பார்க்கின்றான்! 

வந்த வரைக்கும் இலாபம் என்றே மாட்டிய பேர்களை ஏய்க்கின்றான்!எதிலஎதில் மக்கள் ஏமாறு வாரென்ற இலக்கணம் கற்றுத் தெளிகின்றான்! அதில்அதில் நுழைந்து வேலையைக் காட்டி அள்ளிச் சுருட்டிச் செல்கின்றான்! விளம்பரத் தாலே வித்தைகள் காட்டி வேசியைப் போல மயக்குகின்றான்! 

விட்டில் பூச்சியாய் விழுகின்ற மக்களை விழுங்கி ஏப்பம் விடுகின்றான்!

அரசியல்வாதி அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொள்கின்றான்! 

பிரச்னை வந்தால் சட்டத்தின் ஓட்டையில் புகுந்து தப்பிச் செல்கின்றான்! 

உழைப்பு, நேர்மை, தியாகம் என்றால் ஓ ஓ என்று சிரிக்கின்றான்! உருட்டு, புரட்டு, திருட்டு, மிரட்டே ஊரில் ஜெயிக்கும் என்கின்றான்! ஜாலியாய் இருப்பதே வாழ்க்கை என்று தத்துவம் பேசிச் சிரிக்கின்றான்! 

சாயுங் காலம் வந்துவிட்டாலவன் தாசி மதுவெனத் திரிகின்றான்! சிறுகச் சேர்த்துப் பெருக வாழும் சிந்தனை எல்லாம் போயாச்சே! பெருகச் சேர்த்துச் சிறுக வாழும் சின்னப் புத்தி வந்தாச்சே!

லண்டனில் ஓர் தமிழன்

   தாய் நாட்டில் வழியிருக்க.. 

தாய் தகப்பன் அயலிருக்க.. 
கற்றதமிழ் நாவிருக்க..- என் 
மனம் மட்டும் மறுத்தது உடனிருக்க.. 

பள்ளிக்கூட வாழ்க்கை முற்றுப்பெற 
வெளிநாட்டு மோகம் சற்றுத்தொட.. 
மாறுகின்ற சமூகப்போக்கின் முன்னோடியாக 
வெளிநாடு ஒன்றே முன்னிலையானது.. 

ஒரேயொரு ஆண்பிள்ளை 
ஆசைப்பட்டு கேட்டான் என்று - அம்மா 
அடகுவைத்து காசெல்லாம் 
ஆரார்க்கோ கைமாற்றி.. 

கண்டவனின் கால் பிடித்து 
கெஞ்சி மன்றாடி - வலியது மறந்து 
எனக்காய் போராடி - கடைசியில் 
மாணவனாய் அனுமதித்தான் வெள்ளைக்காரன் 

அவன் தந்த விசாவுக்கு மதிப்பளித்து 
வந்தேன் வெளிநாடு- பெற்றொரை தவிக்கவிட்டு.. 
வந்த சந்தோசம் கவலைகளை மறைத்தது 
புதுவித தனிமை ஒருவித இனிமை.. 

அம்மாவை விட்டு விலகாமல் இருந்த நான் 
வாரம் ஒருமுறை அழைப்பு -பின் மாதம் ஒருமுறை 
படிப்பும் வேலையும் நிரந்தரமாய்.. 
வாழ்க்கையே மாறியது இயந்திரமாய் 

அப்பா செலவில் கஸ்டம் தெரியவில்லை அப்போ 
செலவுக்காய் வேலை செய்து கஸ்டப்படுவது இப்போ 
அஞ்சுக்கும் பத்துக்கும் நாள் முழுக்க வேலை பார்த்து 
அதில பாதி படிப்புக்கு, மீதி செலவுக்கு 

யூனிவர்சிட்டி போகாட்டி UKBA பிடிப்பாங்க 
வேலைக்கு போகாட்டி சாப்பாடு கிடைக்காது 
ஒவ்வொரு நாளும் யுகமாய் தெரியுது.. 
ஒருமுறை தான் வாழ்க்கை- அதுவும் வீணே கழியுது 

தீபாவளி பொங்கல் எதுவும் தெரியாது 
தீயவன் நல்லவன் பேதம் புரியாது 
ஏமாற்றம் நஷ்டங்கள் பல வந்து போயின - என் 
மனமாற்றம் இப்ப நொந்து போயின 

தமிழன் என்ற உணர்விழந்தேன் 
எல்லோருக்கும் அடிபணிந்தேன் 
இரவு பகல் பனி வெயில் நினைவிழந்தேன் 
விதியதனை எண்ணி தலை குனிந்தேன்.. 

இடைவேளை ஐந்து நிமிடம் - 
அம்மாவுடன் தொலைபேச.. 
தமிழையும் மறக்காமல்- சிறு 
கவிதை இங்கு வலை வீச.....

Sunday, October 20, 2013

உண்மையை சொல்

உண்மையை 
சொல்வாதானால் 
உனக்கும் 
எனக்கும் 
உலகில் 
உட்கார 
இடம் கிடையாது.....ஆனால் 
உயிர் விட்டு 
கால்நீட்டிப் 
படுக்க 
கானகம் எல்லாம் 
அளவற்ற 
இடம் 
உண்டு

உணர வேண்டிய உண்மைகளில் ஊமையாகி போனவை!!!

இந்த உலகம் உனக்கு 
சிறையல்ல நீதான் 
கைதியாய் வாழ்கிறாய் 

நீ மண்ணுக்காக போராட 
தயங்குகிறாய் ஆனால் 
ஒவ்வொரு விதையும் 
மண்ணோடு போராடியே 
மரமாகிறது 

வியர்வை சிந்தாத உன்னாலும் 
மை சிந்தாத பேனாவாலும் 
எதையும் சாதித்திட முடியாது 

தடை தாண்டி 
ஓடிக் கொண்டிருப்பவனுக்கு 
தடைகள் கண்ணுக்குத் தெரியாது 
நீ நினைப்பது போல வாழ்க்கை 
ஒன்றும் மரதன் ஓட்டமல்ல 
அது தடைதாண்டும் ஒட்டாமே 

பெருமை 
என்பது உன்னைவிட 
திறமைசாலிக்கு நீ 
கைதட்டுவதில் அல்ல 
அவனையும் உனக்காக 
கைதட்ட வைப்பதுதான் 

இந்த உலகம் பூந்தோட்டமல்ல 
நீ வளர தண்ணிர் ஊற்ற 
இந்த உலகம் பெருங்காடு 
நீயாத்தான் வளரவேண்டும் 

உனக்கு 
நண்பன் இருக்கிறானோ 
இல்லையோ உனக்கு எதிரி 
இருக்க வேண்டும் 
ஏனெனில் 
உன்னிடம் அணைக்கும் சக்தியைவிட 
உன்னிடம் எதிர்க்கும் சக்தியையே 
நான் அதிகம் எதிர்பார்க்கிறேன் 

யாரு உன்னை உறிஞ்சி 
எறிந்தாலும் முளைத்து வா 
பனங்கொட்டையாய் 
அதில்தான் உள்ளது 
தனித்தன்மை 

யாருக்காகவும் கண்ணீர்விடு 
யாரும் துடைக்க வருவார்கள் 
என்பதற்காய் கண்ணீர் விடாதே 

உன்னில் 
வளரும் நகத்தையும், 
முடியையும் வெட்ட 
மறப்பதில்லை நீ 
ஆனால்.. 
நீ வளர மறந்தால் 
இந்த உலகமே உன் 
கழுத்துக்கு கத்தியாகும் 

வாழ்க்கையில் மிதக்க 
கற்றுக் கொள்ளாதே 
நீ இறந்தால் தானாகவே 
மிதப்பாய் 
நீந்தக் கற்றுக்கொள் 
அதுவே நீ கரைசேர 
உதவி செய்யும் 

தோல்விகள் 
என்பது உன்னை தூங்க 
வைக்க பாடும் தாலாட்டு அல்ல 
நீ நிமிர்ந்து நிற்பதற்கான 
தேசிய கீதம் 

குட்டக் குட்ட 
கல்லாகாதே 
குட்டக் குட்ட 
சிலையாகு 

வாழ்க்கை என்பது 
ஒரு புத்தகம் அதில் 
ஒரு பக்கம் மட்டும் 
வாழ்க்கையல்ல 
ஒவ்வொரு 
பக்கங்களானதே 
வாழ்க்கை 

உன் 
பேனாவைக் கூட 
மூடிவைக்காதே 
அதை திறக்கும் 
வினாடிகளில் கூட 
நீ 
எழுத நினைத்ததை 
மறந்துவிடக் கூடும் 

உணர வேண்டிய உண்மைகளில் 
ஊமையாகி போனவை இவை 
உணர்ந்துக்கொள் ...

Tuesday, October 8, 2013

சத்தியமாய் நானில்லை..!

பேச்சுப் பல்லக்கு 

தம்பி கால்நடை 

சத்தியமாய் நானில்லை..! 

படிப்பது தேவாரம் 
இடிப்பது சிவன்கோயில் 
சத்தியமாய் நானில்லை..! 

முழுப் பூசணிக்காயை 
சோற்றில் மறைப்பது 
சத்தியமாய் நானில்லை..! 

எரியிற வீட்டில் 
பிடுங்கினது லாபமென்றிருப்பது 
சத்தியமாய் நானில்லை..! 

எதிரிக்குக் குழிவெட்டி 
சதியெனும் வலைவிரிப்பது 
சத்தியமாய் நானில்லை..! 

ஒன்றுமே இல்லாதவொன்றிற்கு 
பரிவட்டம் பிடிப்பது 
சத்தியமாய் நானில்லை..! 

பொய்மையை உரைத்து 
மகுடத்தைச் சூடிக்கொள்வது 
சத்தியமாய் நானில்லை ...! 

உண்மையை உரைத்து 
வெறுப்பைச் சம்பாதிப்பது 
அது மட்டும் நான்தான் 
நானென்னும் இந்த ஆண்மாதான்..! 

Wednesday, August 7, 2013

ஒரு புத்தகம் விரிகிறது


ஏட்டினை புரட்டுகிறேன் 
என் முன்னே 
எழுதிய பக்கங்கள் விரிகிறது 

இதயத்தின் பக்கங்களை புரட்டுகிறேன் 
என்னுள்ளே 
ஒரு வாழ்க்கையின் புத்தகம் விரிகிறது. 

வானத்தைப் பார்கிறேன் 
நிறங்களில் வானவில் 
அழகிய காட்சியாய் வானில் விரிகிறது 

இந்த பூமியை பார்க்கிறேன் 
ஏனோ இங்கே 
சிவப்பு மட்டும் குருதியாய் ஓடுகிறது 

இயற்கையை பார்க்கிறேன் 
எழிலுடன் 
பசுமை வளத்துடன் எங்கும் சிரிக்கிறது 

இங்கே ஏழை மனிதனைப் பார்க்கிறேன் 
நம்பிக்கையில் 
வாக்களித்த வாழ்க்கை கண்ணீரில் நிற்கிறது 

Monday, July 15, 2013

நானாக நான்


எனக்கானவை எல்லாம் 
உன்னிடம் இருந்து 
கிடைக்கப்பெற்றவை.. 
என்னிடம் இருந்தும் சிலவற்றை 
நீ எடுத்திருக்கிறாய்.. 
வேண்டியதை எடுத்து 
தேவையற்றதை 
தந்தும் இருக்கிறாய்.. 

எடுக்கப்பட்டவை... 
கிடைத்தவை இரண்டும் 
நீ இருப்பதும், 
இல்லாது இருப்பதும் போலத்தான்.. 
தேவையின் போது இல்லாமலும், 
இல்லாதபோது தேவையாகவும்.. 
எப்போதும்... 
எப்படியாயினும்... 

ஒரு விசை 
இயக்கம்... 
ஓய்வு... 
நூறின் ஒற்றை விளக்கம்... 
அத்தனையும் ஒன்றில் அடக்கம்.. 
அந்த ஒன்று...?? 
தெளிவான குழப்பம்... 

ஆச்சரியமான பூமியில் 
கேள்விக்குறியுடன் 
நானாக நான் 
நீயாக நீ.. 
சில விளங்க முடியாத உண்மைகள்.. 
நீயாக முயலும் சில நாட்களுடன் காலம்

Sunday, March 31, 2013

என்ர அவர் கனடாவில


உதடுகளில் அவள்
பெருமையை பூசியிருந்தாள்
இதயக் குமுறலை
மறைப்பதற்காக
விழிகளில் தீயை
எரிய விட்டிருந்தாள்
கசியும் கண்ணீர்
காய்ந்து போவதற்காக
இருமனம் ஒருமனமாகி
வண்ணக் கனவுகளுடன்
மணவறை கண்டு
வாழ்க்கை நதியில்
ஆடித் திளைத்திட
ஏங்கிய உள்ளங்கள்
இரண்டும் இரண்டு நாடுகளில்
வாலிபத்தின் வஞ்சனைகள்
பெற்றவரின் ஏக்கங்கள்
உற்றவரின் ஏளனங்கள்
அயலவரின் முணுமுணுப்புக்கள்
ஊரவரின் கண்வீச்சுக்கள்
நண்பரின் அனுதாபங்கள்
புதியவரின் விசாரிப்புக்கள்
அத்தனையும் அவள் சுமந்தாகனும்
சலனமற்ற சாயம் பூச
அவள் கற்றுக்கொண்டாள்
ஆனால்
மனசு மட்டும்
நீரிலுள்ள வாத்தின்
கால்கள் போல
கனடாவை நோக்கி
ஓய்வின்றி
ஓடிக்கொண்டிருந்தது